அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவி வரும் சூழலில், தன்னை கொல்லத் திட்டமிட்டதாலேயே தாம் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த மோதல் இன்னும் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் ஹிட்லரை விடக் கொடியவராக மாறி உலக அமைதிக்கே அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் விமர்சித்துள்ளார்.
உக்ரைன், வெனிசுலா போன்ற நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஈரான் மீதும் அமெரிக்கா போர் தொடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, ட்ரம்ப்பின் இத்தகைய ஆதிக்கப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
