மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு தலைநகர் திரும்பிய பிரதமர், இரவு 11 மணி அளவில் இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.

இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் பங்கேற்றனர்.

ஈரானிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி விநியோகம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய பிராந்திய நிலைமை குறித்த இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

போரினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்த பிரதமர், அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். போர் நடவடிக்கைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.