தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த வழக்கில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. தன் குடும்பத்திற்குப் பில்லி சூனியம் வைத்ததாகச் சந்தேகப்பட்டு, 70 வயது மூதாட்டியை அவரது சொந்த அக்கா மகள்களே கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 70 வயதான மூதாட்டி ஜக்கம்மாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மூதாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் நடத்திய ரகசிய விசாரணையில் கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்தது. அதன்படி, மூதாட்டியின் அக்கா மகள்களான அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்துதான் இந்த கொலையைச் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர வைத்தது. அதாவது, மூதாட்டி தங்கள் குடும்பத்திற்கு எதிராக பில்லி சூனியம் வைத்ததாக அய்யம்மாளும் நாகராணியும் உறுதியாக நம்பியுள்ளனர். இந்த பில்லி சூனியத்தினால் தான் தங்கள் குடும்பத்தில் தொடர் உடல்நலக் குறைவு மற்றும் பல கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே தங்கள் பெற்றோர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்த மூர்க்கத்தனமான நம்பிக்கையாலும், வன்மத்தாலும் ஆத்திரம் தலைக்கேறிய அந்தச் சகோதரிகள் இருவரும், வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஜக்கம்மாளின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பதைப் போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
