ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

வான்வழியாக நிகழ்த்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்திருப்பதால் மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

ஈரான் மீதான இந்தத் தாக்குதலும் அந்நாட்டு உச்ச தலைவரின் படுகொலையும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று சீனா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவால் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரஷ்ய வெளியுறவு மந்திரியிடம் சீன மந்திரி வாங் யி கவலை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் உலக நாடுகளுக்கு இடையே புதிய ராஜதந்திர மோதல்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.