கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு புதிய ஆடை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி வாலிபர் ஒருவர் தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்காமல் இரு வீட்டார் குடும்பத்தினரும் கூடிப் பேசி அந்த வாலிபருக்கே சிறுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்தச் சம்மந்தமான தகவல் காவல் நிலையத்திற்கு எட்டவே, போலீசார் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை அதிரடியாகக் கைது செய்தனர். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்த வாலிபர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை மேற்கொண்டார். அந்த மனுவில், “முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் தான் செய்தது எந்த வகையிலும் குற்றம் அல்ல; இரு வீட்டார் குடும்பத்தினரின் முழு ஒப்புதலுடன்தான் நான் சிறுமியைத் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து என்னை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி அமர்வு நீதிபதி  முக்கிய தீர்ப்பை வழங்கினார். அதில், “மதத் தனிநபர் சட்டங்களை விட போக்சோ சட்டத்திற்குத்தான் சட்டரீதியான கூடுதல் முன்னுரிமை உள்ளது. குற்றம் நடைபெற்ற அந்தச் சமயத்தில் சிறுமிக்கு 17 வயது ஒரு மாதம்தான் ஆகிறது. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வாலிபர் குற்றவாளி என்பது உறுதியாகிறது.

மேலும், உரிய வயதை எட்டாத சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்க உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீதும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்குத் தனிநபர் சட்டங்கள் குற்ற வழக்குகளில் ஒருபோதும் செல்லுபடியாகாது. எனவே, போக்சோ வழக்கிலிருந்து மனுதாரரை விடுவிக்க முடியாது” என்று கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில், “சிறுமி பெயரளவில் மனைவியாக இருந்தாலும், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் தாம்பத்திய உறவு கொள்வது போக்சோ சட்டத்தின்படி அப்பட்டமான குற்றமாகும். சிறுமிகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் முழுமையாக உறுதி செய்வதற்காகவே போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது” என்று தனது  கருத்தைப் பதிவு செய்தது.