கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அதிரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஒன்-டவுன் வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சஞ்சுவின் இந்த அதிரடி ஆட்டத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்த அபாரமான இன்னிங்ஸ் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையைச் சஞ்சு சாம்சன் முறியடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கடைசி ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து 19.2 ஓவர்களிலேயே வெற்றியை உறுதி செய்த சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.