மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகுல்கேடா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான அனிதா என்ற பெண்ணிற்கும், 26 வயதான தேவா என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் திருமணமானவர்கள் என்றாலும், தேவா தனது மனைவியைப் பிரிந்து அனிதாவுடன் பழகி வந்துள்ளார். சமீபகாலமாக இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த தேவா, அனிதாவின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அனிதாவின் மகள், ரத்த வெள்ளத்தில் இருவரும் கிடப்பதைக் கண்டு அலறியதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திலிருந்து கொலையாளி பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் தொடங்கிய காதல், ஒரு கொலை மற்றும் தற்கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.