மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் இருந்து 5 இடங்களுக்கான தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோருடன் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் பிரபல நடிகை கோயல் மாலிக் ஆகிய நால்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதால் இவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தியாவில் தன்பாலின உறவு சட்டப்பூர்வமானது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றிய இவர் தனது தனிப்பட்ட வாழ்வு குறித்தும் வெளிப்படையாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்வர்ட் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் உலகின் செல்வாக்குமிக்க நூறு நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் என்ற புதிய வரலாற்றை மேனகா குருசாமி படைக்கவுள்ளார்.
