மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி விபத்து நடந்த பாராமதி பகுதியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் மிகக் குறைவான பார்வைத்திறன் ஆகியவையே விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5000 மீட்டர் தூரம் வரை பார்வைத் திறன் இருக்க வேண்டும் என்ற நிலையில் அன்று 3000 மீட்டர் மட்டுமே இருந்தும் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பாராமதி விமான நிலையத்தின் ஓடுதளம் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்ததால் அங்குள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்ததும் தரைப்பகுதியில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. விபத்தின் போது விமானத்தின் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளதால் அதில் உள்ள ரகசியத் தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை நாட விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.

முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது மற்றும் போதிய வசதிகள் இல்லாததே இந்தத் துயரச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விசாரணை வாரியம் இது குறித்த விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.