பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை மோதல் தற்போது முழு அளவிலான போராக மாறியுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்துள்ள தாலிபான் பயங்கரவாதிகளே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு நேற்று பாகிஸ்தான் எல்லைப்புற ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பல வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு ராணுவ முகாம்கள் தாலிபான் வசமானதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களான காபூல் மற்றும் கந்தஹார் மீது சரமாரியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் தாலிபான்களின் 27 ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 290 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “பாகிஸ்தானுடன் நான் மிகவும் இணக்கமான உறவைக் கொண்டுள்ளேன். அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகிய இருவரையும் நான் பெரிதும் மதிக்கிறேன். பாகிஸ்தான் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போதைக்கு இந்த விவகாரத்தில் நான் தலையிடப் போவதில்லை.” என்று தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது.