அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த மறுத்த ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கடல் மற்றும் வான் வழியாக ஈரானைச் சுற்றி வளைத்துள்ள படைகள், அந்நாட்டின் 30-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் நகர் முழுவதும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இல்லம் மற்றும் அலுவலகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் தற்போது இணைய சேவை முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
“ஈரான் மக்களே, உங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்ற இதுவே சரியான நேரம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவிப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் தற்போது ஈரான் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது:
அதாவது பஹ்ரைனில் அமெரிக்கக் கடற்படையின் 5-வது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை வீசியுள்ளது. அதேபோன்று குவைத், கத்தாரின் தோஹா, ஜோர்டான் மற்றும் அமீரகத்தின் அபுதாபி ஆகிய இடங்களிலும் அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை முழுமையாக மூடியுள்ளன. ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள், அங்குள்ள இந்தியர்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
சவுதி அரேபியா ஈரானின் பதிலடித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த மோதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
