ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது வான் வழியாகவும் கடல் வழியாகவும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஈரானின் 30-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான இந்தத் தாக்குதலைத் தற்காப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தியதோடு, அந்த நாட்டின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். இந்தச் சூழலில், தங்கள் நாட்டின் உச்ச தலைவரும் அதிபரும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. “இந்தத் தாக்குதலை நீங்கள் தொடங்கிவிட்டீர்கள், ஆனால் இதன் முடிவு உங்கள் கையில் இல்லை” என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் தடுத்து அழித்துள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளின் தலையீட்டால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழல், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.