ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுக்குத் தேவையானதை வழங்க ஈரான் தயாராக இல்லை” என்று கூறியுள்ள அவர், அந்நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதற்காகப் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ஜெனீவாவில் இது தொடர்பாக நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சமீபத்திய பேச்சுவார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்களுக்கு இருக்க வேண்டிய உத்தரவாதங்களை அவர்கள் கொடுக்கத் தயாராக இல்லை. மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தவிர்க்கவே ஈரானுக்கு அதிக அவகாசம் கொடுத்து வருகிறேன். ஈரானைத் தாக்க அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை; ஆனால் சில நேரங்களில் இக்கட்டான சூழலில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்றார்.

மேலும் இந்த நிலையில் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் தற்போது உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.