உலகப்புகழ் பெற்ற மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமான டபிள்யூ.டபிள்யூ.இ-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்ஸ் மெக்மோகன் அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் இவர், அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்வதற்காக அவர் காரை மிக வேகமாகச் செலுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 160 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற வின்ஸ் மெக்மோகன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளார்.
மேலும் விபத்தின் தீவிரத்தைப் பார்த்தபோது பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், அவர் காரில் இருந்து எவ்வித பதற்றமுமின்றி சாதாரணமாக வெளியேறி வரும் காட்சிகள் போலீஸாரால் வெளியிடப்பட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்தில் அவர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியானாலும், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது மல்யுத்த ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
