நெல்லை பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது காதல் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சில காலங்களாகத் தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினைகள் காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சதீஷ், கயிற்றால் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சதீஷைக் கைது செய்த போலீஸார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
