தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். 1999-ம் ஆண்டு திருமணமான இத்தம்பதியினர், சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ள செய்தி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட 12 பக்க மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: எங்களது திருமண வாழ்க்கை ஆரம்ப காலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 2021-ல் விஜய்க்கும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து எனக்குத் தெரியவந்தது. இது எனக்குப் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலம் நான் அவரைத் தொடர்பு கொண்டு அந்த உறவை முடித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.

தொடர்பை முறித்துக் கொள்வதாக விஜய் எனக்கு உறுதியளித்த போதிலும், அவர் அந்த நடிகையுடனான உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இது குறித்து நான் கேள்வி எழுப்பியபோது, எனக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், நான் கடுமையான மன உளைச்சலுக்கும் அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டேன் என சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நடிகையுடன் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார். சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானபோது கூட, விஜய் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் மிகுந்த தர்மசங்கடமான நிலையை உருவாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தைகளின் கல்வி மற்றும் மனநலத்தைக் கருத்தில் கொண்டு இத்தனை காலம் நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருந்தேன். சுமுகமாகப் பிரிய எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தற்போது 2023-ம் ஆண்டு முதல் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

இந்த மனு மீதான விசாரணை வரும் மார்ச் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை மூடிய அறைக்குள் (In-camera hearing) விசாரிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விஜய்யின் தொடர்புகள் குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.