சென்னையில் பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரியாணி சமைத்த ஒடிசாவைச் சேர்ந்த காதல் ஜோடியைப் பிடிக்க 5 தனிப்படை போலீசார் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் நிஷா என்பதும், அவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பூட்டிய வீட்டிற்குள் இருந்த பிரியாணி அண்டாவில் இருந்து கொடூர வாசனை வெளியே வராமல் இருப்பதற்காக, ஒடிசாவைச் சேர்ந்த அந்த ஜோடி அண்டாவின் மூடியைச் சுற்றி மாவு பூசி மறைத்து வைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆக்ரா செல்லும் ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த ஜோடி பயணம் செய்த சிசிடிவி (CCTV) காட்சிகள் சிக்கின.
இந்த சிசிடிவி ஆதாரமே இவ்வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய அந்த ஒடிசா காதல் ஜோடியை உடனடியாகக் கைது செய்ய 5 தனிப்படை போலிசார் ஒடிசா மாநிலத்திற்கு நேரில் விரைந்து தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
