தமிழகச் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் மோதல் வெடித்துள்ளது. “39 தொகுதிகள் எல்லாம் தர முடியாது, 25 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்.. இதுதான் எங்களுடைய கடைசி முடிவு” என திமுக கறார் காட்டியுள்ளது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகளின் வருகை மற்றும் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் ஐக்கியமானது போன்ற காரணங்களால் திமுகவின் கை ஓங்கியுள்ளது. இதனால், காங்கிரஸ் இறங்கி வந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக மேலிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தாலும், “கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை” என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். “பந்து இப்போது காங்கிரஸ் பக்கம்தான் உள்ளது” என திமுக மூத்த தலைவர்கள் கூறுவதால், பல ஆண்டுகால திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையுமா அல்லது காங்கிரஸ் பணிந்து போகுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழக அரசியலில் இது ஒரு ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உருவெடுத்துள்ளது.
