இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்கொலை அல்லது சுயக்காயங்கள் தொடர்பான உள்ளடக்கங்களை டீன் ஏஜ் சிறுவர்கள் மீண்டும் மீண்டும் தேடினால், அதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு உடனடி எச்சரிக்கை (Alert) அனுப்பப்படும் என மெட்டா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அடுத்த வாரம் முதல் இந்த அம்சம் நடைமுறைக்கு வருகிறது. மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் நோட்டிபிகேஷன் மூலம் பெற்றோருக்கு இந்தத் தகவல் ரகசியமாகத் தெரிவிக்கப்படும்.

​சிறுவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது பெற்றோர் தலையிட்டு அவர்களைக் காப்பாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இதுமட்டுமல்லாமல், விரைவில் ஏஐ (AI) சாட்போட்களுடன் டீன் ஏஜ் சிறுவர்கள் பேசும் உரையாடல்களையும் கண்காணித்து, ஆபத்தான தேடல்கள் இருந்தால் அதுகுறித்தும் பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்ப மெட்டா திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் மெட்டா நிறுவனம் எடுத்துள்ள இந்த மெகா முயற்சி இணைய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.