கேரள மாநிலம் கொச்சியில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாற்றுத்திறனாளி இளைஞரை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து, கொடூரமாகத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த இளம்பெண் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொல்லம் மாவட்டம் நைலிலா பகுதியைச் சேர்ந்த அமல் தேவ் என்ற இளைஞர், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் சப்னா என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். கடந்த சில நாட்களாக அமல் தேவிடம் நெருக்கமாகப் பழகி வந்த சப்னா, அவரை நேரில் சந்திக்குமாறு அழைத்துள்ளார்.

இதனை நம்பி, கடந்த 22-ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் பனம்பிள்ளி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அமல் தேவ் சென்றுள்ளார். அவர் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு மறைந்திருந்த சப்னாவின் கூட்டாளிகள் இருவர் மற்றும் வெளியில் இருந்து வந்த மேலும் இருவர் என ஒரு கும்பல் அமல் தேவைச் சூழ்ந்துகொண்டது. அங்கு அந்த இளம்பெண்ணுடன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளுமாறு அமல் தேவ் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதனை ரகசியமாகப் படம் பிடித்து, பிளாக்மெயில் செய்ய அந்தக் கும்பல் திட்டமிட்டிருந்தது. இதற்கு அமல் தேவ் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.

கும்பலால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட அமல் தேவின் விலா எலும்புகள் உடைந்தன. டார்ச் லைட் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்கப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த கும்பல், அதனைச் சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டியுள்ளது. தற்போது அமல் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முக்கியக் குற்றவாளியான சப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மூவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகு அந்த இளம்பெண் காட்டிய குரூரமான மனநிலை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களைப் பார்த்து எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சிரித்த சப்னா, “புகைப்படத்தை நன்றாக எடுங்கள்” என்று கூறியது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

மேலும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கும்பல் ஏற்கனவே இதுபோல வேறு யாரையும் ஏமாற்றியுள்ளதா? என்பது குறித்தும், டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.