குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ‘கிரீம் ரோல்’ (Cream Roll), மிக மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான ‘X’ தளத்தில் @ChapraZila என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, ஒரு சிறிய உணவு உற்பத்தி ஆலையில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் கிரீம் ரோல்கள் தயாரிக்கப்படும் விதம் காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

அந்த வீடியோவில் ரோல்களுக்குள் கிரீம் நிரப்பப் பயன்படுத்தப்படும் இயந்திரம் பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல், பிசுபிசுப்பான அழுக்குகளுடன் காணப்படுகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையுறைகளோ (Gloves) அல்லது தலைக்கவசமோ (Hairnets) அணியாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தயார் செய்யப்பட்ட கிரீம் ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடமும், அதன் சுற்றுப்புறமும் மிகவும் அசுத்தமாக இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இத்தகைய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “இனி கடையிலிருந்து கிரீம் ரோல் வாங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டியுள்ளது” எனப் பல நெட்டிசன்கள் தங்களது குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

வெளியில் உணவுப் பண்டங்களை வாங்கும்போது, அவை தரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.