வயதான பெற்றோரை முறையாகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்து, அதனை நேரடியாகப் பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் குரூப்-1 மற்றும் குரூப்-2 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் இளம் அதிகாரிகளிடையே பேசிய முதல்வர், “பெற்றோரின் தியாகத்தால் தான் நீங்கள் இன்று இந்த உயரிய இடத்தைப் பிடித்துள்ளீர்கள். எனவே, அவர்களைக் கௌரவமாகவும், அன்போடும் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது” என்று வலியுறுத்தினார்.

பெற்றோரை கவனிக்காத ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 10% முதல் 15% வரை பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்யப்படும் தொகை அந்த ஊழியரின் பெற்றோருடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.  மாநில அரசு அதிகாரிகளுக்கு உயர்தரப் பயிற்சி வழங்க, உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் தெலுங்கானா அரசின் MCR HRD நிறுவனம் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் பெற்றோரின் நலனைப் பாதுகாக்கவும், முதியோர் இல்லங்களுக்குத் தள்ளப்படும் பெற்றோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தெலுங்கானா அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.