இந்தியாவில் மார்ச் 1 முதல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, போலிச் செய்திகளைப் பரப்புதல், தேவையற்ற விளம்பரச் செய்திகளை அனுப்புதல் மற்றும் பிறரைத் துன்புறுத்தும் வகையில் செயல்படும் கணக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான கணக்குகளைத் தடை செய்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம், இனி வரும் காலங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் கணக்குகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி முடக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆபாசமான அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கங்களைப் பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்தால், அந்தப் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தேவையற்ற குழுக்களில் இணைவதைத் தவிர்க்கவும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புதிய மாற்றங்கள் சாதாரண பயனர்களைப் பாதிக்காது என்றாலும், விதிமுறைகளை மீறுபவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
