கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, பெற்றோரின் கண்டிப்பால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் – சரஸ்வதி தம்பதியினரின் 13 வயது மகன் திவாகர், பெரியவடவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்தான்.

மேலும் சரியாகப் படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதற்காக அவனது பெற்றோர் அவனைக் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த திவாகர், கடந்த புதன்கிழமை இரவு வீட்டிற்கு வராமல் தலைமறைவாகி உள்ளான். காணாமல் போன மகனைப் பெற்றோர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று காலை பூவனூர் ரயில் நிலையம் அருகே திவாகர் ரயிலில் அடிபட்டு சடலமாகக் கிடந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், திவாகரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்றோரின் கண்டிப்பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, திவாகர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.