சென்னையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா, இந்திய அணியின் ரன் குவிப்பை இன்னும் சற்று குறைத்திருக்கலாம் எனத் தெரிவித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 256 ரன்கள் குவித்தது குறித்துப் பேசிய ராஸா, “இந்திய அணியை 210 முதல் 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். எங்களது பந்துவீச்சும், பீல்டிங்கும் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்க வேண்டும். சில தவறுகளால் இந்தியா இமாலய இலக்கை எட்டிவிட்டது,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
தோல்வி அடைந்தாலும் தனது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு சிறந்த படிப்பினை என்று அவர் குறிப்பிட்டார். “எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள். அதுவும் கிரிக்கெட்டின் தாயகமாகத் திகழும் இந்தியாவில், முதல்முறையாக விளையாடுவது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அனுபவத்தைத் தந்துள்ளதது,” என்றார்.
மேலும் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம், சூப்பர்-8 சுற்றில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
