2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா 44 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் அசத்தினார். ஆட்டம் முடிந்த பிறகு, ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிராட் எவன்ஸ் திலக் வர்மாவை அணுகி, தனது சகோதரி ரெபெக்கா திலக் வர்மாவின் தீவிர ரசிகை என்று கூறினார்.
இதைக்கேட்ட திலக் வர்மா, உடனடியாக ரெபெக்காவிற்காக ஒரு பிரத்யேக வீடியோ செய்தியைப் பதிவு செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் தனது நன்றியைத் தெரிவித்த அவர், “நிச்சயம் ஜிம்பாப்வே வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்” என்று அன்புடன் கூறினார். மைதானத்தில் காட்டிய அதிரடியைத் தாண்டி, களத்திற்கு வெளியே அவர் செய்த இந்த கனிவான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
