வேலூரில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, போலீஸ் பிடிக்கு அஞ்சி வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அங்குள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், அவர் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென மாணவியை வழிமறித்தார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், மாணவியைக் கத்தியால் குத்தியவர்  விக்னேஷ் (19) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரைப் பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு விரைந்தனர்.

போலீசார் விக்னேஷின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ் அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. மாணவி அவருடன் பேச மறுத்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்யத் துணிந்துள்ளார். பின்னர் போலீஸ் நடவடிக்கைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.”

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மாணவிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.