2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியிலிருந்து ஐஜேகே விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
முன்னதாக பாஜகவிலும் இருந்த இவர், ஐஜேகேவில் தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி வெளியேறிய நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஏற்பாட்டில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே லீமா ரோஸுக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சிக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய பதவி வழங்கப்பட்டது கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
