தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ தொடர்பாகப் பெரும் மோதல் வெடித்துள்ளது. இந்த முறை வெறும் ஆதரவு மட்டும் போதாது, ஆட்சியில் அமைச்சரவைப் பங்கீடு வேண்டும் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால், அறிவாலயத்திற்கும் சத்தியமூர்த்தி பவனிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 1-ஆம் தேதியை ‘டெட்லைன்’ ஆகக் கொடுத்துள்ள காங்கிரஸ் தலைமை, திமுக இறங்கி வராவிட்டால் மாற்றுத் திட்டத்தை கையில் எடுக்கத் தயாராகிவிட்டது. குறிப்பாக, மார்ச் 5-ஆம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தி, திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிரடியான ஒரு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக இணங்கி வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க காங்கிரஸ் மேலிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யவும், ஆட்சியில் பங்கு தரவும் சம்மதித்துள்ளதால், ராகுல் காந்தி அந்தப் புதிய கூட்டணியை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளார்.

மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்டப் பேரணியில் ராகுல் காந்தியும், நடிகர் விஜய்யும் ஒரே மேடையில் தோன்றி கைகோர்த்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். திமுகவை பணிய வைக்க ராகுல் காந்தி ஆடும் இந்த ‘வெயிட்டிங் கேம்’ வெற்றியடையுமா அல்லது புதிய கூட்டணி உதயமாகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.