திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் குழு, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக கோரியுள்ளது; மேலும், இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மனிதநேய மக்கள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டுள்ள நிலையில், தாங்கள் மீண்டும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதற்கிடையில், 15 தொகுதிகளின் பட்டியலை வழங்கியிருந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான பேச்சுவார்த்தை திடீரென பிப்ரவரி 27-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த நாட்களில் காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதித் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.