இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான இரா. நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
99 வயதான நல்லகண்ணு அவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதற்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) மதியம் அவரது உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து வழங்கி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை சீராக வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
