கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய் ஒரு காரியக்கிறுக்கன்” என்று சாடியுள்ள அவர், திமுக அரசு அரசியல் லாபத்திற்காக விஜய்யைக் கைது செய்யாமல் விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது, தலைவர் விஜய்யின் வருகை பல மணி நேரம் தாமதமானதால் தொண்டர்கள் சோர்வடைந்தனர். திடீரென அவர் மேடைக்கு வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதில் ஒன்றரை வயதுக் குழந்தையும் அடங்கும். மின்வெட்டு, குடிநீர் வசதி இன்மை மற்றும் முறையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சோக நிகழ்விற்குப் பிறகு, விஜய் தரப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இருப்பினும், இன்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், “கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் என் மீது தேவையற்றுப் பழி போடுகிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சிற்குப் பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தெலங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜுனைக் கைது செய்தது போல, 41 பேர் பலியான கரூர் பேரவலத்திற்குக் காரணமான விஜய்யை அப்போதே கைது செய்திருக்க வேண்டும். ஆனால், வாக்கரசியல் லாப நட்டக் கணக்குப் பார்த்து, திமுக அரசு விஜய்யைப் பாதுகாத்துவிட்டது. 41 பேரின் மரணத்தை விட ஸ்டாலின் அரசுக்கு அரசியல் லாபமே முக்கியமாகத் தெரிந்தது.”

மேலும் அவர் பேசுகையில், “இன்று கரூர் விவகாரத்தில் என் மீது பழி போடுகிறார்கள் என்று கூறும் விஜய்க்கு, அந்த மரணங்களில் எந்தப் பொறுப்பும் இல்லையா? இந்த நிமிடம் வரை அவருக்கு எந்த உறுத்தலும், குற்ற உணர்ச்சியும் இல்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் வைத்து மக்களை ஆளத் துடிக்கும் விஜய் ஒரு மோசமான காரியக்கிறுக்கன். இறந்தவர்களின் பெயர்களைச் சொல்லி இரங்கல் கூட தெரிவிக்காத அவரது தலைக்கணம் ஆணவம் மிக ஆபத்தானது” என்று கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

மேலும் கரூர் விபத்து தொடர்பாக அதிமுக, பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் ஒருபுறம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியும் விஜய்யை நேரடியாகத் தாக்கத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.