தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கணக்குகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில், அக்கட்சியின் முக்கியக் கூட்டணியான காங்கிரஸ் உடனான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது: “திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மிகவும் பலமான கூட்டணி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறி வருகிறார். ஆனால், கள நிலவரம் வேறாக உள்ளது. கடந்த ஒரு மாத காலமாகத் திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் காங்கிரஸ் கட்சியைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இது இரு கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய பிளவை உண்டாக்கியுள்ளது.”

திமுகவின் தேர்தல் வியூகம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளை எப்போதும் ஒருவித அச்சுறுத்தலிலேயே வைத்திருப்பதுதான் திமுகவின் பாணி. கூட்டணிக் கட்சிகள் சுயமாகச் சிந்திப்பதையோ அல்லது அதிகாரத்தைப் பகிர்வதையோ திமுக தலைமை விரும்புவதில்லை. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பின் உள் குமுறல்களைச் சுட்டிக்காட்டிய அவர், “கூட்டணியில் தொடர்ந்தாலும் கூட, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்த வேட்பாளர்கள் தோல்வியடைவதை உறுதி செய்யத் திமுக திட்டமிட்டுள்ளதாகப் பல காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பேசிக் கொள்வதை என்னால் உணர முடிகிறது. தங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க நினைக்கும் ஒரு விசித்திரமான சூழல் அங்கு நிலவுகிறது,” எனத் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், தொகுப் பங்கீடு மற்றும் ஆட்சிப் பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் தவெக நிர்வாகியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.