வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார். வழக்கம்போல தனது பாணியில் ஒரு குட்டிக்கதையுடன் உரையைத் தொடங்கிய அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களைச் சந்திக்கப் போவதாக அதிரடி வாக்குறுதி அளித்தார். “என் சொந்தங்களாகிய உங்களைச் சந்திக்க நான் வரப்போகிறேன்” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
மேலும், வரவிருக்கும் தேர்தலைப் பற்றிப் பேசிய விஜய், அரசியல் களத்தை இரண்டே துருவங்களாகப் பிரித்துக் காட்டினார். தமிழகத்தில் இந்தத் தேர்தல் போட்டி என்பது இரண்டே தரப்பினருக்கு இடையேதான் என்று குறிப்பிட்ட அவர், “ஒன்று தீய சக்தியான திமுக, இன்னொன்று தூய சக்தியான தவெக” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். விஜய்யின் இந்த நேரடியான அரசியல் அட்டாக், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
