டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா அடைந்த  தோல்வி குறித்து, முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்களின் தவறான பேட்டிங் அணுகுமுறையே இந்த 76 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்விக்குக் காரணம் என அவர் சாடியுள்ளார். இப்போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, 111 ரன்களுக்குச் சுருண்டது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:

“இந்திய வீரர்களின் ஷாட் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது. தென்னாப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர் மற்றும் பிரெவிஸ் ஆடிய விதத்தைப் பாருங்கள். பந்து சரியாக பேட்டிற்கு வராத ஆடுகளத்தில், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் இந்திய பேட்டர்கள் அதில் கோட்டை விட்டனர்.”

தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா குறித்து கவாஸ்கர் விரிவாகப் பேசினார். குரூப் சுற்றின் மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த அபிஷேக், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய ஆட்டம் குறித்து கவாஸ்கர் கூறுகையில், “அபிஷேக் தற்போது ஒருவிதமான பதற்றத்தில் இருக்கிறார். நெட் பயிற்சியில் அவுட் ஆனாலும் அடுத்த பந்தை ஆடலாம் என்ற தைரியம் இருக்கும்.

ஆனால் சர்வதேச போட்டிகளில் அழுத்தம் கைகளை கட்டிப்போடும். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டனர். அபிஷேக்கிற்கு ஆஃப்-சைடில் இடம் கொடுத்தால் அடிப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் ரபாடா போன்றவர்கள் தொடர்ந்து அவரது உடலை நோக்கியே பந்துவீசினர்” என்றார்.

அபிஷேக் சர்மா தனது ஃபார்முக்குத் திரும்ப கவாஸ்கர் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்: முதலில் ஒரு ரன் எடுத்து கணக்கைத் தொடங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பூஜ்ஜியத்தில் அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்திலிருந்து வெளிவர அதுவே வழி.” கட்டாயப்படுத்தி பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்கக் கூடாது. நான்கு பந்துகள் ‘டாட்’ ஆனாலும் பரவாயில்லை, நிதானமாக இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும் என்றார்.

மேலும் இஷான் கிஷன், திலக் வர்மா போன்ற முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததை கவாஸ்கர் சுட்டிக்காட்டினார்.