ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட படுதோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்” என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, ஒருகட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எனினும், டேவிட் மில்லர் (63 ரன்கள்) மற்றும் டெவால்ட் பிரெவிஸ் (45 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சன் (4 விக்கெட்), கேசவ் மகராஜ் (3 விக்கெட்) ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் ஷிவம் துபே மட்டுமே 42 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “நாங்கள் பந்துவீச்சைச் சிறப்பாகவே தொடங்கினோம். ஆனால், 7 முதல் 15 ஓவர்கள் வரை அவர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துவிட்டார்கள். பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.
பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை வென்றுவிட முடியாது, ஆனால் அங்கேயே போட்டியைத் தவறவிட வாய்ப்புள்ளது என்பதை நாங்கள் உணர வேண்டும். எங்களுக்குத் தேவையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதிதான். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவோம் என்றார்.
இந்திய அணியின் தோல்விக்கிடையிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடியின் பந்துவீச்சை சூர்யகுமார் வெகுவாகப் பாராட்டினார். “பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஜோடி எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் இணைந்து 8 ஓவர்கள் வீசி, வெறும் 45-50 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் எனது அணியில் இருப்பது பெருமைக்குரியது” என அவர் குறிப்பிட்டார். பும்ரா 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
