அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணங்கள் சுமூகமாக அமைய அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். ஆனால், அனுபவம் வாய்ந்த விமானப் பணிப்பெண்கள் சொல்வது என்னவென்றால், முறையான திட்டமிடல் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்பதாகும். உங்கள் சூட்கேஸ் சக்கரங்கள் சேதமடையாமல் இருக்க அவற்றில் கருப்பு நிற டேப்களை ஒட்டுவது முதல், லக்கேஜ்கள் அழுக்காகாமல் இருக்க பழைய டி-ஷர்ட்டால் சூட்கேஸை கவர் செய்வது வரை பல சுவாரசியமான யோசனைகளை அவர்கள் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, சூட்கேஸின் சிப்பர்களில் பிளாஸ்டிக் டேக் (Plastic Tag) போடுவதன் மூலம் யாராவது உங்கள் பையைத் திறக்க முயற்சித்தால் உடனடியாகக் கண்டுபிடித்துவிடலாம்.

​இன்னும் ஒரு படி மேலே போய், சூட்கேஸ் தொலைந்து போனால் அதைக் கண்டுபிடிக்க உதவும் ‘ஏர்டேக்’ (AirTag) சாதனத்தைத் திருடர்கள் கண்ணில் படாமல் இருக்க, ஒரு ‘மென்டோஸ்’ மிட்டாய் டப்பாவிற்குள் மறைத்து வைக்குமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது ஒரு சிறந்த மாறுவேடமாகச் செயல்படும். அதேபோல், நகைகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாத்திரை போடும் டப்பாக்களைப் பயன்படுத்துவதும், காலணிகளின் அழுக்கு உடைகளில் படாமல் இருக்க ஹோட்டல் ஷவர் கேப்களைப் பயன்படுத்துவதும் மிகச் சிறந்த ‘ஸ்மார்ட்’ யோசனைகளாகும். பஞ்சி கயிறுகள் (Bungee cords) மற்றும் கேராபினர்கள் (Carabiners) போன்ற எளிய கருவிகள் உங்கள் பயணத்தை மிகவும் எளிமையாக்கும்.