சுதிப்தோ சென் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகிப் புயலைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லரில், இந்துப் பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி (பீப்) ஊட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் ‘பீப் – பரோட்டா’ என்பது ஜாதி, மதங்களைக் கடந்து அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும் நிலையில், திட்டமிட்டே மத வெறுப்பைத் தூண்ட இப்படி ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை கேரளா முழுவதும் ‘பீப் திருவிழா’ நடத்தி வருகின்றன.
பொதுமக்களுக்குப் பரோட்டாவும் பீப் கறியும் பரிமாறி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்துப் பதிவிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவின் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கப் பார்க்கும் இதுபோன்ற பொய்யான பரப்புரைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
