உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நூர்ப்பூர் பகுதியில், திருமணம் ஒன்றில் மின்சார வாரியம் செய்த அதிரடி காரியம் மணமகன் வீட்டாருக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

டயமண்ட் காலனியைச் சேர்ந்த மணமகன் சுபம் சௌஹானின் வீட்டில், பிப்ரவரி 19 அன்று மாலை நஜிபாபாத்திற்குப் பாராத் (ஊர்வலம்) கிளம்பத் தயாராக இருந்தது. வீடு முழுவதும் உறவினர்கள் சூழ்ந்திருக்க, டிஜே இசையுடன் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.

அப்போது திடீரென வந்த மின்வாரிய லைன்மேன் ஒருவர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மின் கம்பத்தில் ஏறி வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

தான் அனைத்து மின் கட்டணங்களையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும், கையில் ரசீது இருப்பதாகவும் மணமகன் சுபம் கெஞ்சியும், அந்த லைன்மேன் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் மின்சாரத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் மணமேடை மற்றும் அலங்கார விளக்குகள் அணைந்து, திருமண வீடு இருளில் மூழ்கியது. இந்தச் சம்பவம் மணமகன் குடும்பத்தினருக்கு உறவினர்கள் முன்னிலையில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உயர் அதிகாரிகள் இது பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு தனியார் காலனி உரிமையாளருக்கும் நுகர்வோருக்கும் இடையிலான பணத்தகராறால், ஒப்பந்த ஊழியரான அந்த லைன்மேன் அழுத்தம் காரணமாகவே இப்படிச் செய்தது தெரியவந்துள்ளது.