மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று (பிப்ரவரி 19, 2026) ஒரு வழக்கத்திற்கு மாறான பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தின் ஏர் இந்தியா கேட் எண் 3 அருகே உள்ள ஏசி யூனிட்டின் மேல், சுமார் 7 அடி நீளமுள்ள இந்திய சாரைப் பாம்பு (Indian Rat Snake) ஒன்று மிகவும் நிதானமாக அமர்ந்திருந்தது.

விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், தங்கள் தலைக்கு மேலே இவ்வளவு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்தத் திகில் காட்சியை அங்கிருந்த புகைப்படக் கலைஞர் கரண் சோலங்கி தனது மொபைலில் படம் பிடிக்க, அது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விலங்கு நல அமைப்பினர், லாவகமாகச் செயல்பட்டு அந்தப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர்.

பிடிபட்டது விஷமற்ற சாரைப் பாம்புதான் என்றாலும், அதன் பிரம்மாண்ட உருவம் அங்கிருந்தவர்களைப் பதற வைத்தது. மீட்கப்பட்ட பாம்பு பின்னர் வனத்துறையின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.