இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரை (2026) வங்கதேச அணி புறக்கணித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி (ICC) நிராகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வங்கதேச முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்த கருத்துக்களுக்கு அந்த அணியின் உதவி பயிற்சியாளர் முகமது சலாவுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவு கிரிக்கெட் வாரியமும் வீரர்களும் எடுத்தது என்று நஸ்ருல் கூறியதை ‘பச்சைப் பொய்’ எனச் சாடியுள்ள சலாவுதீன், நஸ்ருல் ஒரு பொய்யர் என்றும் அவரை ஒரு ஆசிரியராகப் பார்க்கவே வெட்கமாக இருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் போது வீரர்களின் கருத்துக்களைக் கேட்காமல், விளையாட்டு ஆலோசகர் தனது முடிவை அவர்கள் மீது திணித்ததாகவும், இதனால் பல வீரர்களின் 27 ஆண்டுகால உலகக்கோப்பை கனவு சிதைந்துவிட்டதாகவும் சலாவுதீன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த முடிவால் தனது அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பல நாட்களாகப் பேசவே முடியாமல் மனமுடைந்து போயிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நலனுக்காகத் தியாகம் செய்ய வீரர்கள் தயாராக இருந்தாலும், உண்மையை மறைத்துப் பொய் சொல்வதை ஏற்க முடியாது என்றும், சரியான முறையில் தகவல் பரிமாற்றம் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய மனக்கசப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.
