90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மீனா, தனது இரண்டாவது திருமணம் குறித்துப் பரவி வரும் வதந்திகளுக்கு முதன்முறையாக மிகுந்த ஆதங்கத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் எனத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தவர் மீனா. பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் திரையில் ஜொலிக்கும் அவர், தற்போது டிஜிட்டல் தளத்திலும் தடம் பதிக்கிறார்.
இயக்குநர் சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின்’ என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: “இந்தத் தொடரில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகவும், தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் தைரியமான பெண்ணாகவும் நடித்துள்ளேன். இதில் உள்ள த்ரில்லர் அம்சங்களை விட, அந்தப் பெண்ணின் மனநிலை மற்றும் போராட்டமே என்னைக் கவர்ந்தது,” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
சமீபகாலமாக இணையதளங்களில் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்துப் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. இது குறித்துப் பேட்டியொன்றில் மனவருத்தத்துடன் பேசிய மீனா: முன்பெல்லாம் செய்திகள் என்னிடம் வராது. ஆனால் இப்போது சமூக வலைதளக் காலம் என்பதால், ஒரு பொய்யான செய்தி காட்டுத்தீயாகப் பரவுகிறது.” “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. ஆதாரமே இல்லாமல் நான்சென்ஸ் போல எழுதுவது வேதனையளிக்கிறது.”
“என் வாழ்க்கையைப் பற்றி நான் தான் பேச வேண்டும். ஆனால் என்னைத் தவிர மற்ற அனைவரும் என் திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தினார். தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் குறித்துப் பேசிய அவர், “நான் கர்மாவை நம்புகிறேன். எனக்குத் தெரிந்த சிலரே இது போன்ற காரியங்களைச் செய்தபோது, அவர்கள் அதன் விளைவை அனுபவித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும்,” என்று நிதானமாகவும் அதே சமயம் உறுதியாகவும் பதிலளித்தார்.
மேலும் கணவரை இழந்த பிறகு மகளுக்காகவும், தனது கலைப்பயணத்திற்காகவும் மீனா எடுத்து வரும் ஒவ்வொரு அடியும், அவரை ஒரு ‘வலிமையான பெண்ணாக’ அடையாளப்படுத்தி வருகிறது.
