தமிழ் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு இடையிலான ஆரோக்கியமான நட்பு குறித்து நடிகை ஷாலினி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை ஷாலினி, அங்கு செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பேசுகையில் தனது கணவர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இடையிலான தனிப்பட்ட உறவு குறித்து மனம் திறந்தார். அவர் கூறியதாவது:

விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகிறது. திரையில் அவர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் உண்மையாகவே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்வார்கள். அது பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒரு விஷயம் என்றார்.

திரைத்துறையில் இவர்களது ரசிகர்கள் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடிப்பது வழக்கமாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் பரஸ்பர மரியாதையுடனும், அன்புடனும் பழகி வருவதை ஷாலினியின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாலினி பொது மேடையில் தோன்றி, இரு உச்ச நட்சத்திரங்களின் நட்பு குறித்துப் பேசியுள்ள இந்தத் தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ‘தளபதி’ மற்றும் ‘தல’ ரசிகர்கள் மத்தியில் இந்தப் பேச்சு நெகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.