இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டு தனது உணவு முறையில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று திரும்பிய அவர், தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முகாமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, தற்போது சைவ உணவுக்கு மாறியுள்ளார். உடல் தகுதியை‌ மேம்படுத்தவும், 2028 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் கனவை நனவாக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது தந்தை சஞ்சீவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார்.

தற்போது வைபவ் இறைச்சிக்கு பதிலாக பனீர், பருப்பு மற்றும் சாதம் போன்ற சத்தான சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருகிறார்.

விரைவில் 15 வயதை எட்டவுள்ள வைபவ், ஐசிசியின் வயது வரம்பு விதிகளின்படி சர்வதேச போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவார். 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது திறமையையும் உடல் தகுதியையும் மெருகேற்றி வரும் வைபவ், பிசிசிஐ தரும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.