மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வியின் மீது தீராத ஆர்வம் கொண்ட இளம் தாய் ஒருவர், தனது 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நான்டெட் நகரைச் சேர்ந்த 21 வயதான ஷிதல் சந்திரகாந்த் சித்தே என்ற அந்த மாணவி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர்.

மேலும் தனது கணவர் வேலைக்குச் சென்றுவிடுவதாலும், குழந்தையைப் பராமரிக்க வீட்டில் ஆள் இல்லாத நிலையிலும், கல்வியைத் தொடர வேண்டும் என்ற உறுதியோடு குழந்தையைத் தூக்கிக்கொண்டு தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். தேர்வு மைய அதிகாரிகள் அந்த மாணவியின் நிலைமையைப் புரிந்து கொண்டு, குழந்தையைப் பாதுகாப்பாகத் தூங்க வைக்கத் தொட்டில் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்து உதவிக்கரம் நீட்டினர்.

இந்நிலையில் ஏற்கனவே ஆங்கிலத் தேர்வின்போதும் குழந்தையுடன் வந்திருந்த ஷிதல், தற்போது அரசியல் அறிவியல் தேர்வையும் அதே மன உறுதியுடன் எதிர்கொண்டுள்ளார். “கல்வி மிகவும் அவசியமானது, ஒரு தாயான பிறகும் எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு அளிக்கின்றனர்” என்று கூறும் அவர், எத்தகைய சூழலிலும் தனது படிப்பை விடப்போவதில்லை என்ற அவரது விடாமுயற்சி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.