தனித்து வாழும் தாயால் வளர்க்கப்படும் குழந்தை, தனது பள்ளி ஆவணங்களில் தாயின் பெயரையும், தாயின் சாதியையும் அடையாளமாகப் பயன்படுத்த முழு உரிமை உண்டு என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தையின் நலனே சட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மற்றும் அவரது தாய் தரப்பில் 2025-ஆம் ஆண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் சிறுமியின் தந்தை, தாய்க்கு எதிராக இழைத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாகக் கைது செய்யப்பட்டு, குடும்பத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டார்.

சிறுமி தனது தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்து வருகிறார். இதனால் பள்ளிச் சான்றிதழில் தந்தையின் பெயரையும், சாதியையும் நீக்கிவிட்டு தாயின் அடையாளத்தைச் சேர்க்கக் கோரி கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். ஆனால், ‘விதிமுறைப்படி தந்தையின் அடையாளத்தையே தொடர வேண்டும்’ எனக் கூறி கல்வி அதிகாரி அதனை நிராகரித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ஹிதென் வெங்கவ்கர் அடங்கிய அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கினார். தந்தைக்கும் குழந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், தந்தையின் அடையாளத்தைச் சுமக்கச் சிறுமியைக் கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கும், யதார்த்தத்திற்கும் எதிரானது.

ஒரு தாயைத் தனித்துவமான பெற்றோராக அங்கீகரிப்பது என்பது தர்மம் அல்ல; அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தின் வெளிப்பாடு. குழந்தையின் அடையாளம் தந்தையின் வழியாகவே வர வேண்டும் என்ற எண்ணம், தந்தைவழிச் சமூகத்தின் பழைய மனநிலை. இன்றைய நவீன இந்தியாவில், குறிப்பாகத் தாய் மட்டுமே வளர்க்கும் சூழலில், இத்தகைய நடைமுறைகள் பெண்களுக்குச் சுமையாக அமைகின்றன.

2024 மார்ச் 14 அன்று அரசு வெளியிட்ட அரசாணையில், கல்வி ஆவணங்களில் தாயின் பெயரைச் சேர்ப்பது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. “பள்ளிச் சான்றிதழில் உள்ள சாதி மற்றும் பெயர் ஒரு குழந்தையின் சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. உயிரியல் ரீதியான தந்தை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக, அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாத குழந்தை அந்தச் சாதி அடையாளத்தைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. வாழும் சூழலில் தாய் எந்தச் சாதியைச் சேர்ந்தவரோ, அதனையே குழந்தையும் பின்பற்றலாம்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

“மேலும் தனித்து வாழும் ஒரு தாயைக் குழந்தையின் அனைத்து அடையாளங்களுக்கும் (பெயர் மற்றும் சாதி) முழு ஆதாரமாக அங்கீகரிப்பது சமூகத்தைச் சிதைக்காது; மாறாகச் சமூகத்தைப் பண்படுத்தும்,” என்று கூறி, சிறுமியின் பள்ளி ஆவணங்களை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.