பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் ஷகீல் அகமது பட், தேசிய ஹாக்கி சம்மேளனத்தின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் விளையாட்டு உலகையே அதிர வைத்துள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ஒரு தேசிய அணி என்று கூட பார்க்காமல் வீரர்களைத் தெருவில் அலைக்கழித்த கொடுமை அரங்கேறியுள்ளது. தங்குவதற்கு இடம் இல்லாமல் 13 மணி நேரம் ஏர்போர்ட்டிலேயே காத்திருந்தது, சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டது மட்டுமில்லாமல், மேட்ச் விளையாடப் போகும் முன்னால் வீரர்களைப் பாத்திரம் கழுவ வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. “நாங்கள் என்ன அநாதைகளா? மனநோயாளிகளாக எங்களை மாற்றிவிட்டார்கள், பிறகு எப்படி நாட்டுக்காகப் பதக்கம் வெல்ல முடியும்?” என்று கேப்டன் ஷகீல் பட் குமுறியுள்ளார்.

​இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியும், அந்தப் பணம் எங்கே போனது? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 நாட்கள் தங்க வேண்டிய இடத்தில் வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே தங்கும் வசதி செய்யப்பட்டதால், கடைசி நேரத்தில் மலிவான இடங்களுக்கு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட மன உளைச்சலுக்கு மத்தியில்தான் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு தேசிய அளவிலான வீரர்களைப் பாத்திரம் கழுவ வைத்த இந்தச் சம்பவம், பாகிஸ்தான் விளையாட்டுத்துறையின் கேவலமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.