இந்தூரில் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த பிறகும், துளிகூட வருத்தமோ பயமோ இல்லாமல் அந்த எம்பிஏ (MBA) மாணவன் பியூஷ் தமனோடியா செய்தியாளர்களுக்குக் கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் கையில் விலங்குடன் இருந்தபோதும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, “நடந்தது நடந்துவிட்டது, அதைத் தெரிந்து கொண்டு இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று அவன் பேசிய விதம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயிரைப் பறித்துவிட்டு, அதன் தீவிரத்தை உணராமல் ஒரு சைக்கோ போல அவன் காட்டிய அந்த மெத்தனமான போக்கு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​”எல்லாவற்றுக்கும் சரியான நேரம் வரும், அப்போது காரணத்தைச் சொல்கிறேன்” என்று சினிமா பாணியில் அவன் கொடுத்த திமிர் பேச்சு, அவனிடம் இருக்கும் வக்கிரமான புத்தியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தான் செய்த கொடூரமான செயலுக்காகக் கூனிக்குறுகி நிற்க வேண்டிய இடத்தில், ஒருவித கர்வத்துடனும், இறுமாப்புடனும் அவன் நடந்து கொண்டது, கல்வியறிவு பெற்ற ஒருவன் எவ்வளவு பெரிய மிருகமாக மாறியிருக்கிறான் என்பதற்குச் சான்றாக உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் நிலையில், “இவனுக்குச் சாதாரணத் தண்டனை போதாது, அந்தச் சிரிப்பை அடக்கக் கடுமையானத் தண்டனை வேண்டும்” என நெட்டிசன்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.