புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம், தமிழ்நாட்டில் மட்டும் தவெகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக ரங்கசாமி வெளிப்படையாகக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் 2029 வரை பாஜக ஆட்சி நீடிப்பதால், புதுச்சேரி மாநில நலன் கருதி அங்கு மட்டும் பாஜகவுடனான கூட்டணியைத் தொடர ரங்கசாமி விரும்புகிறார். ஆனால், தமிழ்நாட்டில் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரங்கசாமிக்கும் அவரது சமூகத்திற்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இந்தப் பகுதிகளில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், தமிழக அரசியலில் கால் பதிக்கவும் விஜய்யின் தவெக சரியான கூட்டாளியாக இருக்கும் என அவர் கருதுகிறார்.

புதுச்சேரிக்கு ஒரு கூட்டணி, தமிழ்நாட்டுக்கு ஒரு கூட்டணி என்ற ரங்கசாமியின் இந்த இரட்டை நிலைப்பாடு பாஜக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அமித்ஷாவைச் சந்தித்தபோது தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக உறுதியளித்த ரங்கசாமி, தற்போது தமிழ்நாட்டில் மாற்று முடிவை எடுத்துள்ளது வரும் தேர்தலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.