தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற அழுத்தம் காரணம் இல்லை என சிபிஐ உறுதி செய்துள்ளதை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தின்போது, அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வித ஆதாரமும் இன்றி மதமாற்றமே காரணம் எனப் பொய் பிரச்சாரம் செய்ததாகவும், இதன் மூலம் தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகளை இழந்து வாடிய பெற்றோரைத் தவறாக வழிநடத்தி, அரசியல் ஆதாயம் தேடிய பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் சேவையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், திட்டமிட்டு மதவெறுப்பைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட அண்ணாமலை மற்றும் பாஜக மாவட்டத் தலைவர் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மூலம் பாஜகவின் ‘கீழ்த்தரமான அரசியல்’ அம்பலமாகிவிட்டதாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.